நம் நாடு சுதந்திரமடைந்த காலத்தில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதே நமது ஒரே லட்சியமாக இருந்தது. இந்த நோக்கத்தை மனதில் வைத்தே விவசாயத் துறையில் பல புதிய திட்டங்களைத் தீட்டினோம். அணைகள் கட்டுவதில் ஆரம்பித்து, உணவுக் கிடங்குகளை அமைப்பதுவரை அப்போது நமக்கிருந்த ஒரே நோக்கம் ஒவ்வொரு இந்தியனும் பசித்த வயிறோடு தூங்கச் செல்லக்கூடாது என்பதுதான்.
ஆனால், இன்றைய நிலை என்ன? இந்தியா முழுக்க உள்ள கிராமங்களையும் ஏழை விவசாயிகளையும் பலி கொடுத்துதான் நம்நாடு வேகமாக வளர்ந்து வருகிறது! இந்தியா முழுக்க உள்ள 105 கோடி மக்களில் 83 கோடி பேர் வறுமையின் கொடுமைக்கு எப்போது வேண்டுமானாலும் ஆளாகலாம் என்கிற நிலையில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள் மட்டும் 93%. இதில் 80% தொழிலாளர் விவசாயம் மற்றும் விவசாயத் தொழில்களைச் சார்ந்து இருப்பதாக ஒருங்கிணைப்படாத தொழிலாளர்களுக்கான தேசிய கமிஷன் சொல்கிறது.
தமிழகத்தை எடுத்துக்கொண்டால், 48% நகர்மயமாகிவிட்டது என்கிறார்கள். 2020-க்குள் கிட்டத்தட்ட 70% நகர்மயமாகிவிடுமாம். இப்படி அசுர வேகத்தில் விளைநிலங்களை பிளாட் போட்டு விற்றுக்கொண்டிருந்தால், நமக்குத் தேவையான உணவு எங்கிருந்து கிடைக்கும்? கிராமங்களிலிருந்து சாரைசாரையாகக் கிளம்பி நகர்ப்புறத்தை நோக்கி வருகிறார்கள் மக்கள். ஏன்? கிராமத்தில் வேலை இல்லை. விவசாயம் கட்டுப்படியாகக்கூடியதாக இல்லை. சிறிய அளவில் நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகள் கழுத்தை நெரிக்கும் கடன் காரணமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்த ஆண்டு மட்டுமே 16,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதிலிருந்தே விவசாயத் துறையை நாம் எந்த அளவில் அக்கறையோடு கவனிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
கடந்த சில பத்தாண்டுகளாக விவசாயம் பற்றி நம் அரசாங்கத்தின் அணுகுமுறை முற்றிலும் மாறியிருக்கிறது. முன்பு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் மிகுந்த அக்கறை காட்டினோம். இன்று நமக்குப் பணம்தான் முக்கியம். பணம் கிடைக்க வேண்டுமென்றால் எதை வேண்டுமானாலும் வளர்க்கலாம் என்கிற அளவுக்குப் போய்விட்டோம். இப்போது தமிழகத்தில் சாப்பிடுவதற்குத் தேவையான உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்துவிட்டது. தானியங்களின் உற்பத்தி 40% குறைந்துவிட்டது. ராகி, கம்பு போன்ற சத்து தானியங்கள் ஏறக்குறைய அழிந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டது.
உணவு உற்பத்திக்குப் பதிலாக நாம் என்ன செய்கிறோம்? பெட்ரோல் தயாரிக்கத் தேவையான 'ஜெட்ரோபா' என்னும் தாவரத்தை ஹெக்டேர் கணக்கில் வளர்க்கிறோம். அரசாங்கமும் அதைத்தான் வளர்க்கச் சொல்கிறது. அல்லது தேக்கு மரம் வளர்க்கிறோம்; பூக்களை வளர்க்கிறோம்; மலைப்பகுதிகளில் தேயிலை, காபி போன்ற பணப் பயிர்களை வளர்க்கிறோம். இப்படியே போனால் நம்மிடம் நிறைய பணம் இருக்கலாம். ஆனால், சாப்பிடுவதற்கு நிச்சயம் உணவு இருக்காது!
உணவு தானியத்தில் தன்னிறைவு என்ற நிலையை அடைவதற்குப் பதிலாக இரண்டு மிகப்பெரிய தவறுகளை நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். அதில் ஒன்று ஏற்றுமதி, இன்னொன்று, இறக்குமதி. நம் விவசாயிகள் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலையைக் கொடுக்க நாம் தயாராக இல்லை. ஆனால், இப்போது நமக்கு ரேஷனில் கிடைக்கும் பொருளின் விலையைவிடக் குறைவான விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அந்த விலையை நம் விவசாயிகளுக்குக் கொடுத்தாலாவது அவர்கள் தொடர்ந்து விவசாயம் செய்வார்கள். தவிர, அத்தியாவசியப் பொருட்களை எந்த அளவுக்குக் கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற கணக்குவழக்கும் நமக்கு இல்லாமல் போய்விட்டது. அத்தியாவசியமான உணவுப் பொருட்களை நாம் நிறைய ஏற்றுமதி செய்கிறோம். எதிர்காலத்தில் திடீரென ஏதாவது ஒரு விபரீதமான விளைவு ஏற்படுமெனில் அதைச் சமாளிக்க முடியாமல் திண்டாடிப் போவோம்.
இதேபோல, நம் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை வாங்காமல், அதிக விலை கொடுத்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். தாய்லாந்து, இந்தோனேஷியா, பர்மா போன்ற நாடுகளிலிருந்து அதிகமான விலைக்கு அரிசி வாங்குகிறோம். பிலிப்பைன்ஸிலிருந்து தேங்காய் வாங்குகிறோம். தெற்காசிய நாடுகளிலிருந்து பருப்புகளை வாங்குகிறோம். ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமை வாங்குகிறோம். வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசியமான பொருட்களை இறக்குமதி செய்தால், உள்ளூரில் உற்பத்தியானதை கடலில் சென்று கொட்டவா முடியும்?
ஆக இந்த நிலைமை மாற நாம் என்ன செய்ய வேண்டும்? விவசாயிகளுக்கு வெறும் கடன் தள்ளுபடி மட்டும் போதாது. நீண்டகால நோக்கில் சில அடிப்படையான விஷயங்களை நாம் செய்தாக வேண்டும்.
விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரைக் கொடுப்பதில் அரசாங்கம் முதலில் கவனம் செலுத்த வேண்டும். புதிய அணைகளைக் கட்டி நீரைத் தேக்கி வைப்பதில் ஆரம்பித்து, ஒவ்வொரு தோட்டத்திலும் சொட்டுப் பாசனம் அமைப்பது வரை பல வேலைகளை அரசாங்கம் உடனடியாகச் செய்தாகவேண்டும்.
நீடித்த வேளாண்மைக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்யவேண்டும். பி.டி.விதை உற்பத்திக்கு அரசாங்கம் எந்த வகையிலும் உதவி செய்யக்கூடாது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் எல்லா பொருட்களுக்கும் குறைந்தபட்ச விலை நிச்சயம் கிடைக்கவேண்டும். உரத்துக்கு அளிக்கப்படும் மானியம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டே வருகிறது. இந்த மானியத்தையும் அதிகமாக்கவேண்டும்.
இந்த மாதிரியான அடிப்படையான விஷயங்களைச் செய்தாலே போதும், இந்தியா முழுக்க விவசாயம் செழிப்பாக இருக்கும். அந்த நேரத்தில் இந்தியா நிச்சயம் 9 சதவிகித வளர்ச்சியைக் கடந்திருக்கும்!
*********
மேலே உள்ள விஷயம் அனந்த விகடனில் வந்ததா?
It's Different is commenting all around with above!